June 11, 2004

சொல்லுக்கு எத்தனை சொல்?

தமிழிலே சொல், வார்த்தை என்ற இரண்டைத் தவிர 'சொல் என்பதற்கு இணையான சொற்களாக வேறு எதையும் நாம் பயன்படுத்துவதில்லை. தமிழைப் போல வளமான மொழியில் எப்படி இல்லாமல் போகும்? அதிலும் வார்த்தை என்பது வடமொழியிலிருந்து வந்தது. அதையும் விட்டுவிட்டால் 'சொல்' என்கிற ஒரே 'சொல்'தானா தமிழில்!

சொல் என்பதற்கு இணையானவைகளாக நன்னூல் கூறுவது: (அடைப்புக் குறிகளுக்குள் இருப்பது வேர்ச்சொல்)

மாற்றம், நுவற்சி (நுவல்), செப்பு, உரை, கரை, நொடி, இசை, கூற்று, புகறல் (புகல்), மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி (பகர்), இயம்பல் (இயம்பு).

ஆக நம்மிடம் புகலப் போதிய நொடிகள் இருப்பினும் அவற்றை மறந்துவிட்டோம் என்று நான் விளம்பினால், அதற்கு உங்கள் மாற்றம் என்னவாய் இருக்கும்? கொஞ்சம் அறையுங்களேன். ;-)

மாற்றம் என்ற சொல்லை மாத்து என்று கன்னடத்திலும், மாட்ட என்று தெலுங்கிலும் பயன்படுத்துகின்றனர். 'செப்பு' ஏனோ தெலுங்கில்மட்டும்தான் இருக்கிறது. 'செப்புமொழி பதினெட்டுடையாள்' என்று பாரதி சொன்னபிறகு அந்தக் கிளவியை மறந்தே போய்விட்டோம். 'நொடி' என்பது கன்னடத்தில் 'நுடி' என்று வழங்குகிறது. ராஜ்குமார் பல படங்களில் 'கன்னட நுடி'யின் பெருமையைப் பாடியுள்ளார். தமிழில் 'அறை'தல் மலையாளத்தின் 'பறை'தல் ஆகியிருக்கலாமோ என்று எண்ண இடம் இருக்கிறது.

உங்களைக் கரைந்து இவற்றையெல்லாம் நுவல்வதின் பொருள் என்னவென்றால் இனிமேலாவது இவற்றை உங்கள் அன்றாடப் பேச்சில் விளம்பிப் புழக்கத்துக்குக் கொண்டுவரலாமே என்ற அருத்தியில்தான்.

அட.. அருத்தியா... அப்படீன்னா என்ன?

1 comment:

R.DEVARAJAN said...

’மாற்றம்’ என்பது ‘விடை’ எனும் பொருளிலும் கையாளப்படுகிறது.
‘வேர்ச்சொல் ஆராய்ச்சி’ யில் தேர்ந்த அறிஞர் தற்காலத்தில் யார் ?
’ஒட்டியாணம்’, ’கலியாணம்’ ஆகிய இரு சொற்களுக்கும்
வேர்ச்சொற்கள் யாவை ?

தேவ்
rdev97@gmail.com
09364188444