June 25, 2004

உ.வே.சா.வின் விளாங்காய்க் கதை

ஒரு ஆசாமி நிறையச் சம்பாதித்தான். நன்றாகத் தனக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தான். எல்லாம் இருந்தும் அவனுக்கு இல்லாதது ஒன்றே ஒன்றுதான்: தருமகுணம். கடற்கரைக் காக்காய்க்குச் கடலைபொறி போடாத கருமி அவன்.

அந்தக் காலத்தில் வங்கி கிடையாது. இவனிடமோ ஏராளமாகப் பொற்காசுகள். செல்வம் 'பெற்றான் பொருள் வைப்புழி' என்று வள்ளுவர் சொல்லியிருக்கும் வங்கியாகிய பசியால் துடிக்கும் வறியவரின் வயிறுபற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதில் நம்பிக்கையில்லை. வயதாகிவிட்டது. ஒரு துணியில் தங்கக் காசுகளை முடிந்து, தன்வீட்டு மண்சுவரில் ஒரு ஓட்டை செய்து, அதில் உள்ளேவைத்துப் பூசிவிட்டான். அவனுக்கு உங்களைப் போல ஒரு நல்ல நண்பன் இருந்தான். அவன் மட்டும் விடாமல் "தர்மம் செய், அதுதான் கடைசி வரையில் உன்னைப் பாதுகாக்கும், உன்னோடு கூடவரும்" என்று சொல்லியபடியே இருப்பான்.

அந்திமக் காலம் வந்தது. நோயிலும் பாயிலும் விழுந்தான் கிழவன். மரணத் தறுவாய். எங்கெங்கோ இருந்த மக்கள் எல்லோரும் வந்து தந்தையின் படுக்கை அருகே நிற்கிறார்கள். அவனது ஆசையை நிறைவேற்றவேண்டுமே. அப்பனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு உபசரிக்கிறார்கள், நச்சரிக்கிறார்கள்.

திடீரென்று கிழவனுக்கு நண்பன் அறம் செய்யச் சொன்னது நினைவுக்கு வந்தது. சாகும்போதாவது தர்மம் செய்யலாமே என்ற எண்ணமும் வந்தது. "சுவருக்குள்ளே பொற்காசு முடிப்பு இருக்கிறது" என்று சொல்லவேண்டும். வாய் அடைத்துவிட்டது. அருகில் நின்ற மகனிடம் கையைப் பொற்கிழி போலக் காண்பித்து, சுவரையும் காண்பித்தான்.

"ஐயோ, அப்பா எதையோ கேட்கிறார். புரிந்துகொண்டு கொடுக்கமுடியாத பாவியாகிவிட்டேனே" என்று நினைத்து ஒரு மகன் கதறினான். இவர் மீண்டும் அதே சைகை காட்டினார்.

"ஆஹா, எனக்குத் தெரிந்துவிட்டது!" ஒரு மகன் கூக்குரலிட்டான். "அவருக்குப் புளிப்பான விளாங்காய் ரொம்பப் பிடிக்கும். அது வேண்டும் என்று கேட்கிறார்" என்றான் ஒருவன்.

"மூன்றாவது வீட்டில் விளாமரம் இருக்கிறது. நான் போய் நிலைமையைச் சொல்லி எப்படியாவது ஒரு காய் வாங்கிக்கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு இன்னொரு மகன் ஓடினான்.

அவன் வருவதற்குள் கிழவனின் உயிர் பிரிந்தது. சுவற்றில் புதைத்த பொன் குடும்பத்தினருக்கோ, ஏழைகளுக்கோ பயன்படாமல் போயிற்று. ஊர்க்காரன் ஒருவன் சொன்னானாம் "இத்தனைத் துட்டு வச்சிக்கிட்டு என்ன பிரயோசனம்? நாலுபேருக்குச் சோறு போட்டிருந்தா வயிறு குளுந்து வாழ்த்துவாங்க. இப்ப ஒண்ணுமில்லாமப் போயிட்டாம் பாரு. இவன்லாம் பொறந்து என்ன புண்ணியம்?"

இதையும் வள்ளுவன் சொல்கிறான்:

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை


(நன்றியில் செல்வம்: 1003)

[சம்பாதிப்பது ஒன்றே குறியாக வாழ்ந்து, (அந்தப் பொருளை ஏழைகளுக்குக் கொடுப்பதனால் வரும்) புகழை விரும்பாத மனிதர் பிறந்ததே உலகத்துக்குப் பாரம்.]

நன்றி: என் சரித்திரம், எழுதியவர்: உ.வே.சாமிநாதையர், பதிப்பு: டாக்டர் உ.வே.சாமிதையர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600 090, தமிழ்நாடு, இந்தியா.

1 comment:

Absarb said...

வணக்கம் ,
என் பெயர் செல்வா
நான் facebookல "கதை சொல்வோம்" ஒரு advert துவங்கி இருக்கேன். தற்செயலாக உங்களுடைய மதுரமொழி blog னை காண நேர்ந்தது. அவற்றில் உள்ள தொகுப்புகளை படித்தேன், மிகவும் சுவையாக(மனதிற்கு) இருந்தது. இவற்றில் இருந்து சில பல தொகுப்புகளை எனது "கதை சொல்வோம்" இல் பதிவு செய்திட ஆர்வமாக உள்ளேன்.அதற்கு உங்களுடைய அனுமதி வேண்டி காத்திருக்கிறேன்.selvaalion@yahoo.co.in , selvaalion@gmail.com, selvaalion@rediff.com, selvaalion@aol.com
+919976595883 இந்த number sms செய்தால் கூட போதுமானது.