December 30, 2007

திருவெம்பாவை - 10

திருச்சிற்றம்பலம்

அவனுக்கு ஊர் ஏது, பேர் ஏது!

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.


இந்தப் பாசுரமும் சிவபெருமானின் பெருமையைக் கூறுவதே:

'கீழுலகங்கள் ஏழுக்கும் கீழே, எங்கே சொற்களும் எட்டாதோ, அதற்கப்பாலும் செல்கிறது சிவபெருமானின் திருப்பாத மலர்கள். எல்லாப் பொருள்களும் தம்மாலான உயரத்துக்குச் சென்று முடிந்தபின் அதற்கப்பாலும் உயர்ந்து நிற்கிறது எம்பெருமானின் பூப்புனைந்த சிரம். ஒருபுறம் உமையம்மைக்குக் கொடுத்தமையினாலே அவனது திருமேனி இப்பாலினது எனக் கூறத்தக்கதல்ல. அவன் எல்லாமும் ஆனதால் ஒருவனேயும் அல்லன்.

'வேதங்களும் வானவரும் மானுடரும் துதித்த போதும் அவன் புகழ் வற்றாதது; அவனோ இணையற்ற உயிர்த்தோழன். அவனுக்கு அடியாரோ கணக்கற்றவர்.

'அத்தகைய குற்றமற்ற குலத்தவனான அரனின் கோவிலைச் சார்ந்த பெண்பிள்ளகளே! அவனது ஊர் எந்த ஊர்! எதை அவனது பெயர் என்று கூறுவது? அவனுக்கு யார் உறவினர், யார் அயலவர். அவனை என்னவென்று சொல்லிப் பாடுவது!'

சிறப்புக்குறிப்பு: பாதாளம் ஏழு என்பவை - மகாதலம், ரசாதலம், தராதலம், சுதலம், நிதலம், விதலம், அதலம். இவ்வாறு கீழும் மேலும் எவ்வளவு அவன் வியாபித்திருக்கிறான் எனக் கூறுவதும், திருவண்ணாமலைத் தலபுராணத்தின் வேறொரு வடிவே. அவனை 'சிவபுராண'த்தில்

... ... ... ... வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா


என்றும் வர்ணிக்க முற்படுகிறாரல்லவா மாணிக்க வாசகர்.

எல்லா மனிதரிலும் ஆண்பாற் கூறுகளும் பெண்பாற்கூறுகளும் இருப்பதை விஞ்ஞானம் கூறுகிறது. சிவபெருமானை மாதொருபாகனாகக் காண்பதும் அந்தப் புரிதலைக் காட்டுவதே.

எந்தப் பெயரால் அழைத்தாலும் இறைவன் ஏன் என்று கேட்கிறான், எவற்றுள்ளும் வியாபித்து நிற்கிறான் என்பதனாலே 'ஏதவன் ஊர், ஏதவன் பேர்' என்கிற மலைப்பு ஏற்படுகிறது. விருப்பும் வெறுப்பும் மனிதரின் மனவிகாரங்கள். இறைவனுக்கு அத்தகைய வேறுபாடுகள் இல்லை. அதுமட்டுமல்ல, விருப்பு வெறுப்புகளால் அலைக்கழிக்கப் படுபவர்களுக்கு அவன் புலப்படுவதும் இல்லை. எனவேதான் 'ஆருற்றார், ஆரயலார்' என்கிற சமத்துவ பாவம்.

இந்தப் புரிதல் வந்தபின் அவனது புகழும் சொற்களைக் கடந்ததாகிறது. எனவேதான் 'அவனைப் பாடுவது எப்படி?' என்கிற பெருமலைப்பு. ஆனால் அவ்வாறான எல்லையற்ற தன்மையே அவனது எல்லையற்ற புகழுமல்லவா?

இன்னும் வரும்...

No comments: