January 10, 2008

திருப்பள்ளியெழுச்சி - 2

திருச்சிற்றம்பலம்

அருணன் கிழக்கை அணுகினான்,
இருள் அகன்றது!


Sunrise temple small

அருணண்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ, நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிறை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே!


'சூரியன் கிழக்குத் திசையை நெருங்கிவிட்டான். இருளோ ஓடி அகன்றுவிட்டது. உதயம் ஆனது.

'அதேபோல உன் முகமலரில் கருணையாம் சூரியன் எழுகின்றது. அண்ணலே! உன் கண்களாம் எழில் மலர்கள் விரிகின்றன. அவை விரியும்போதே அடியவர்களாம் வண்டுகள் சூழ்ந்து ரீங்காரமிடுகின்றன. இவற்றை நீ அறிந்துகொள்.

'அருள்நிதியை அள்ளி வழங்கவரும் ஆனந்தமாகிய மலையே, அலைகடலே! திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே, துயிலகன்று எழுவாயாக!

சிறப்புப்பொருள்: கதிரவன் ஒற்றைச் சக்கரம் கொண்ட, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருபவன். அந்தத் தேரின் சாரதிதான் அருணன். அருணனின் மக்கள்தாம் சம்பாதியும் ஜடாயுவும். கருடன் இவனது சகோதரன். இந்திரன் திசை என்பது கிழக்கு.

அன்பர்களை வண்டுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். 'குளத்தில் மலரும் தாமரைப் பூவின் அருகிலேயே இருந்த போதும் தவளைகள் தேனின் அருமையை அறியமாட்டா. வெகுதூரத்தில் இருக்கும் தேனீக்கள் பூவின் நறுமணத்தைத் தொடர்ந்து வந்து தாமரையில் இருக்கும் தேனைப் பருகிச் செல்லும்' என்பார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

நாம் வாழும் காலத்திலேயே ஸ்ரீ சத்ய சாயி பாபா, மாதா ஸ்ரீ அமிர்தானந்த மயி, ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தா போன்றவர்கள் பெரும் ஆன்மிக மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். ரமணரிடமும் ராமகிருஷ்ணரிடமும் வந்து சென்றவர்கள் சிலரே. அவர்களை அறியாமல் வெற்று வேதாந்தம் பேசியவர்களே பலர். அவ்வாறுதான் நாமும் நமது அறிவு என்னும் சிறிய அளவுகோலால் ஆன்மிகம் என்னும் ஆழ்கடலை அளக்க முயன்று, இயலாததாலே, பெரியோரைப் பழித்தும் இழித்தும் பேசி, அவர்களை அணுகிப் பயன்பெறாமல் இருக்கிறோம்.

ஏன், ஸ்ரீ ராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் இந்த மண்ணில் உலவிய காலத்தில் அவர்களை இகழ்ந்தவர்களும் அசட்டை செய்தவர்களும் இருக்கிறார்களே. அதனால் இழப்பு அவர்களுக்கா? 'காந்தம்கூடத் துருப்பிடிக்காத ஊசியைத்தான் இழுக்கும்' என்பார் ஸ்ரீ ரமண மஹரிஷி. நமது மன அழுக்குகளை அகற்றினால், ஞானிகளை இனங்காணலாம். தெய்வம் நமக்குள் தெரியும். பாசியை அகற்றினால்தானே பௌர்ணமி நிலவின் பிம்பம் குளத்தில் தெரியும்!

இன்னும் வரும்...

1 comment:

சிவம் அமுதசிவம் said...

மணிவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்.
இந்தத் திருப்பள்ளியெழுச்சிப் பாடலை இங்கே நயந்திருக்கிறீர்கள்.
பெரும்பாலானவர்களைவிட எழுத்துப்பிழைகள் குறைவாகவே உள்ளது.
ஆனாலும், ஒரேயொரு இடத்தில்மட்டும் ஒரு சிறிய தவறு நேர்ந்திருக்கிறது.
திரள்நிரை அறுபதம்.. இப்படித்தான் வரும். இதையே நீங்கள் , திரள்நிறை அறுபதம்.. என்று எழுதியிருக்கிறீர்கள். தயவுசெய்து திருத்திவிடவும். நன்றி.