January 13, 2008

திருப்பள்ளியெழுச்சி - 5

திருச்சிற்றம்பலம்

போக்கும் வரவும் இல்லாதவன்

பூதங்கள்தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள்முன் வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


'பஞ்ச பூதங்களின் உள்ளும் உறைபவனாக நீ இருக்கிறாய். அதுமட்டுமல்லாமல் உனக்குப் போக்கும் வரவும் கிடையாது என்றெல்லாம் அறிஞர்கள் புகழ்ந்து பாடுகின்றனர், ஆடுகின்றனர். அவற்றை நான் கேட்டிருக்கின்றேன். ஆனால் உன்னைப் பார்த்ததாக யாரும் கூறி நான் கேட்கவில்லை.

'குளிர்ச்சியான வயல்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் உறைகின்றவனே, எங்கள் சிந்தனைக்கும் எட்டாதவனே. எமக்கு முன்னே தோன்றி, எமது குற்றங்களையெல்லாம் களைந்து ஆட்கொண்ட எம்மானே! பள்ளி எழுந்தருள்வாயாக.'

சிறப்புப்பொருள்: உலகம் ஐம்பூதங்களால் ஆனது. பஞ்ச பூதங்களிலும் இறைவன் இருக்கின்றான் என்றால் உலகின் ஒவ்வொரு அணுவிலும் அவன் இருக்கிறான். ஆனால் அறிஞர்களோ அவனது போக்கு வரவில்லா நிரந்தர இருப்பைப்பற்றி அறிவுபூர்வமாகப் பாடுகிறார்கள். அவனோ அறிவினால் அறியத் தக்கவனல்லன். எனவேதான் புலவர்கள் என்னதான் பாடினாலும் ஆடினாலும் அவர்கள் மெய்யாகவே இறைவனைக் கண்டுணர்ந்தவர்கள் அல்லர்.

ஆனால் மாணிக்க வாசகர் போன்ற ஞானியரோ தமது எல்லையற்ற பக்தியினாலும் தவத்தினாலும் இறைவனை ஈர்த்துவிடுகின்றனர். அத்தகையோரிடம் சிறிது குற்றங்கள் இருப்பினும், இறைவன் தானே எதிர்வந்து, குற்றங்களைக் களைந்து அவர்களை ஆட்கொள்கிறான்.

மனம், அறிவு ஆகியவை உடல் சார்ந்தவை. எவனொருவன் தன்னைத் தனது உடலும் உடல் சார்ந்தவைகளும்தான் எனத் தவறாக நினைக்கிறானோ அவனுக்கு மெய்யறிவு துலங்குவதில்லை. 'இது நானல்ல, இது நானல்ல (நேதி, நேதி) என்று உடல்சார்ந்தவற்றை ஒவ்வொன்றாக ஒதுக்கினான் என்றால் இறுதியாக எஞ்சுவது 'நான்' ஆக இருக்கும். அதுதான் சுயதரிசனம். அதுதான் ஞானநிலை. அதுதான் ரமணர் போன்றோர் நிலைத்திருந்த ஆத்மானந்த அனுபவ நிலை.

அந்த நிலை நம் போன்றோருக்கு ஊகிக்கவும் அரிது என்பதனாலேயே 'சிந்தனைக்கும் அரியாய்' என்கிறார். ஆனால் இறைவன் தனது பரம கருணையினாலே, நாம் நமது அறிவின்மீதும், உடலின்மீதும் கொண்ட அபிமானங்களை அகற்றிச் சரணடைவோமேயானால், அவனே நமது குற்றங்களை அகற்றி ஆட்கொள்கிறான். 'நீ இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் இறைவன் உன்னை நோக்கிப் பத்து அடி எடுத்து வைக்கிறான்' என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியது இதைத்தான்.

(அருஞ்சொற்பொருள்: ஏதம் - குற்றம்.)

இன்னும் வரும்...

No comments: